Monday, June 28, 2010

பசி தவிர்த்த பரமர்

நட்பு கொண்டவர் துன்பப்படுங் காலத்தில் அவர் துன்பம் நீக்குதலே உயர்ந்த நட்பு. துன்பம் நேர்ந்த பிறகு நீக்குதலைவிட, துன்பம் நேராமல் நீக்குதல் அதனினும் உயர்ந்த நட்பு ஆகும். நண்பர் தாம் அனுபவிக்கும் துன்பத்தை வெளிப்படுத்திக் கூறியபிறகு அதனை உணர்ந்து நீக்க முயல்வது அத்துணை சிறப்பன்று. நண்பரின் துன்பத்தை அவர் கூறாமலே குறிப்பால் உணர்ந்து களைவதே விழுமிய நட்பு. அத்தகைய உயர்நட்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

சுந்தரர் பல பதிகளை வணங்கித் திருக்குருகாவூர்க்குச் சென்றார். அப்பொழுது, மிகுந்த நீர் வேட்க்கையும், பசியும் அவர்க்கு ஏற்ப்பட்டது.அதனால் மிகவும் வருந்தினார். இதனையுனர்ந்த இறைவன் சுந்தரர் வரும் வழியில் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்பந்தர் அமைத்தார். பசி நீக்கப் போதிசோரும் தாகம் தணிக்கக் குளிர் நீரும் ஏந்திக் கொண்டு மறைவேதியர் வேடந்தாங்கி அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.

சுந்தரர் அடியார்கள் திருக்கூட்டத்தினருடன் அப்பந்தருக்குள் புகுந்தார். இறைவன் அளித்த போதிசோற்றை உண்டு, குளிர் நீரைப் பருகி பசியும், தாகமும் தவிர்ந்தார். பின்னர் சுந்தரரும் அடியார்களும் இறைவன் திருவருளை நினைந்தபடி உண்ட களைப்பினால் உறங்கினர். அப்பொழுது, வேதியர் வடிவில் எழுந்தருளிய இறைவன் தன்நீர்ப்பந்தருடனே மறைந்தருளினார். துயில் நீங்கி எழுந்த சுந்தரர் வேதியரையும் பந்தரையும் காணாமையால் வந்தருளியவர் சிவபெருமானே என உணர்ந்தார். அவனருளைப் போற்றிப் பாடினார்.

Tuesday, June 15, 2010

ஞானசம்பந்தர் கூறும் நிலையாமை




அல்லல்கள் நிறைந்து துக்கமுடைய வாழ்க்கையை மெய்யென்று எண்ணித் துயரச் சூழலில் சிக்கித் தவிக்கும் பர்ருடையவர்களைஎல்லாம் நோக்கி ஞானசம்பந்தப்பெருமான் அறைகூவி அழைக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஆசையால் முயற்ச்சித்து இறுதியில் கிடைப்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனையுருகின்ர வாழ்வை விட்டுத் திருக்கோடிகா இறைவனைச் சென்று வணங்குங்கள் என்கிறார்.

" இன்று நன்று நாளை நன்றென்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டு போதுமின்" (பா.௧) என்றும்

" அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடமினோ"- (பா.௨) என்றும்

"துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்" (பா.௩)

என்றும் ஞானசம்பந்தர் அருளியுள்ளமையை நோக்க மனித வாழ்வை நிலைத்த இன்பம் உடையாது எனக்கருதும் பற்றுடையவர்களுக்கு இவ்வாழ்வு நிலையாமையை உணர்த்தி இறைவநிடத்தே செல்ல ஆற்றுப்பதுத்துகிறார்.

"முன்னே நீர் செய்பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியா
தின்ன நீறிடும் பையில் மூழ்கிறீர்" (பா.௫) என்றும்

"ஏவமிக்க சிந்தையோடின்ப மேய்தலாமேனப்
பாவமேத்தனயும் நீர்செய்தொரு பயனிலை" (பா.௬) என்றும்

கூறுவதிலிருந்து துன்பம் நிறைந்த வாழ்க்கை அமைந்த காரணத்தைக் கூறுகின்றார். இதனின்று விடுபடவேண்டும் எனில் இம்மனித வாழ்க்கையைக் கருவியாக கொண்டு முயற்சி செய்ய வேண்டும். மனித வாழ்வு பிணி, மூப்பு, இறப்பு போன்றவைகளால் துயருற்று வாழும் நிலை தவிர்க்க இயலாது. இந்நிலையிலும் இறைவனைப் பற்றிப் போற்றி வாழ வேண்டும்.
இளமை மகிழ்வானது. ஆனால் நிலையானதல்ல. முதுமை வருத்தமானது. அதுவும் நிலையானதல்ல. ஆனால் இரண்டையும் நிலையானது என்று கருதுபவர்கள் இளமையை இழக்கும்போழுது வேதனையுற்றும் முதுமை அடையும் பொழுது வருத்தமுற்றும் துயருறுகின்றனர். இந்நிலைக்குக் காரணம் என்ன? பற்றற்றான் பற்றினை இளமையிலிருந்து பற்று வைத்து பற்றாததே. பற்றை இறைப் பொருளின் மீது பாதிக்காது வாழ்வுப் பொருளின் மீது பதியவைத்ததே வாழ்க்கையின் எல்லா நிலையிலும் துன்பம் கப்பிக் கொள்ளக் காரணமாகிறது. இதனை நன்குணர்ந்த ஞானசம்பந்தர் துயரமில்லா வாழ்வு வாழ இறைவனைப் பணிதல் வேண்டும் என்கிறார்.

" எனழிந்த வாழ்க்கையை இன்பம் என்றிருந்து நீர்
மானழிந்த மூப்பினால் வருந்தான் முன்னம் வம்மினோ" (பா.௭) என்றும்

" மற்றி வாழ்க்கை மெய்யேனும் மனத்தினைத் தவிர்ந்து நீர்
பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்தேழுமினோ" (பா.௮) என்றும்

ஞானசம்பந்த பெருமான் அறிவுறுத்துகின்றார்.

எனவே உலக இன்பங்களில் பற்றுடன் மூழ்காது எச்செயல்களையும் இறைவன் அருளே என நினைந்து இளமை, பொருள், யாக்கை நிலையாமையை உணர்ந்து வாழ்வோமானால் முன்னைப் பாவமானது தானழிந்து இம்மையில் இன்பநிலை அடையலாம் என்பது உறுதி.

இதழ்: 'சிவ சிவ' மார்ச் ௨00௨

Monday, June 14, 2010

பாலைத்துறையர்


நீலமாமணி கண்டத்தர், நீள் சடைக் கோல மாமதிக்கங்கையும் கூட்டி மகிழ்ந்துறையும் பதி திருப்பாலைத்துறை. இப்பகுதியில் ஞானசம்பந்தர் வந்து வழிபட்டுச் சென்றார். ( திருஞானசம்பந்தர் புராணம் பா. ௩௬௪) என்பார் சேக்கிழார்.


அப்பர் பெருமான் இப்பகுதியில் தம் திருக்கைகளால் உழவாரப் பெருந் தொண்டாற்றி, தமிழால் போற்றி வழிபட்டமையும் அப்பர் புராண ( பா.௧௯௮) வழி அறியலாம். இருவரும் சமகாலத்தவர்கள். ஆனால் கிடைக்கபெற்ற திருமுறைகளில் அப்பர் சுவாமிகள் பாடிய ஒரு பதிகம் மட்டுமே திருப்பாலைத் துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.


இறைவனை இத்தளத்தில் வந்து வழிபட்டவர்கள் யார்? யார்? எனப் பட்டியலிடுகிறார் அப்பர் சுவாமிகள். சித்தர்களும், கன்னியர்களும், தேவர்களும், தானவர்களும், பித்தர்களும், நான்மறை வேதியர்களும் அத்தனே நமை ஆளுடையாய் என்று பணிவர் என்பார்.


பவள மேனியராய், மதகளிற்றின் உரி போர்த்து நின்ற இறைவனின் வீரத்தை தன தவள வெண்ணகையால் போகம் தோய்ந்த புணர்முலை மங்கை பாகந்தோய்ந்தவராக மாற்றினான். பெரும்பாலும் சிவன் திருக்கோயில்களில் அம்பிகை சன்னதி இறைவனின் இடப்பாகம் அமைந்து இருக்கும். இந்நிலை இறைவனின் இடப்பாகம் பெற்ற மாதோருபாகர் நிலையினை குறிக்கும். ஆனால் இத்தளத்தில் அம்பிகை சன்னதி, இறைவன் சன்னதிக்கு வலப்பாகத்தே அமைந்துள்ளது. இது திருமணத்திற்கு முன்னர் உள்ள நிலை. இறைவனை அடைய அம்பிகையும் தவம் இயற்றிய காட்ச்சியைத்தான் அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார் எனலாம்.


சூலை நோய் வந்து துயர் உற்ற போதும், சுண்ணாம்பு நீற்றறையில் அடைத்து வைத்தும், நஞ்சு வைத்தும், கொலைக்களிற்றை ஏவியவிடத்தும், கல்லிலே கட்டிக் கடலிலே வீழ்த்தியபோழுதும் நேர்ந்த துக்கங்களில் தொடர்ந்து இறைவன் துக்கத்தின் சாயல் கூட வருத்தாது காப்பாற்றிய அருட்செயலை அனுபவத்தால் அறிந்தவர் அப்பரடிகள். எனவே, துன்பங்கள் தொடர்கின்ற பொழுது இறைவன் அதனின்று மீட்பான் என்ற உறைப்பு உள்ளத்திலே பிறவிதோறும் உயிர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இத்தளத்தில் பாடுகிறார்.


"தொடருந் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்த


தடரும் போதரனாயருள் செய்பவர் " (பா.௮)


என்றும், எவ்வாறு இறைவன் அருள் செய்வான் என்பதற்கு


" அத்தனே நமையாளுடையாய் எனும்


பத்தர் கட்கன்பர் " என அருளுவான் என்பார்.


"பாலைத்துறை இறைவனைக் கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே " என்ற அருள் வாக்குக்கு ஏற்ப மனமொழி மெய்களால் வணங்கி வினையிநின்று விடுபடுவோமாக.



இதழ். "சிவசிவ " ஜனவரி ௨00௨