Monday, June 14, 2010

பாலைத்துறையர்


நீலமாமணி கண்டத்தர், நீள் சடைக் கோல மாமதிக்கங்கையும் கூட்டி மகிழ்ந்துறையும் பதி திருப்பாலைத்துறை. இப்பகுதியில் ஞானசம்பந்தர் வந்து வழிபட்டுச் சென்றார். ( திருஞானசம்பந்தர் புராணம் பா. ௩௬௪) என்பார் சேக்கிழார்.


அப்பர் பெருமான் இப்பகுதியில் தம் திருக்கைகளால் உழவாரப் பெருந் தொண்டாற்றி, தமிழால் போற்றி வழிபட்டமையும் அப்பர் புராண ( பா.௧௯௮) வழி அறியலாம். இருவரும் சமகாலத்தவர்கள். ஆனால் கிடைக்கபெற்ற திருமுறைகளில் அப்பர் சுவாமிகள் பாடிய ஒரு பதிகம் மட்டுமே திருப்பாலைத் துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.


இறைவனை இத்தளத்தில் வந்து வழிபட்டவர்கள் யார்? யார்? எனப் பட்டியலிடுகிறார் அப்பர் சுவாமிகள். சித்தர்களும், கன்னியர்களும், தேவர்களும், தானவர்களும், பித்தர்களும், நான்மறை வேதியர்களும் அத்தனே நமை ஆளுடையாய் என்று பணிவர் என்பார்.


பவள மேனியராய், மதகளிற்றின் உரி போர்த்து நின்ற இறைவனின் வீரத்தை தன தவள வெண்ணகையால் போகம் தோய்ந்த புணர்முலை மங்கை பாகந்தோய்ந்தவராக மாற்றினான். பெரும்பாலும் சிவன் திருக்கோயில்களில் அம்பிகை சன்னதி இறைவனின் இடப்பாகம் அமைந்து இருக்கும். இந்நிலை இறைவனின் இடப்பாகம் பெற்ற மாதோருபாகர் நிலையினை குறிக்கும். ஆனால் இத்தளத்தில் அம்பிகை சன்னதி, இறைவன் சன்னதிக்கு வலப்பாகத்தே அமைந்துள்ளது. இது திருமணத்திற்கு முன்னர் உள்ள நிலை. இறைவனை அடைய அம்பிகையும் தவம் இயற்றிய காட்ச்சியைத்தான் அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார் எனலாம்.


சூலை நோய் வந்து துயர் உற்ற போதும், சுண்ணாம்பு நீற்றறையில் அடைத்து வைத்தும், நஞ்சு வைத்தும், கொலைக்களிற்றை ஏவியவிடத்தும், கல்லிலே கட்டிக் கடலிலே வீழ்த்தியபோழுதும் நேர்ந்த துக்கங்களில் தொடர்ந்து இறைவன் துக்கத்தின் சாயல் கூட வருத்தாது காப்பாற்றிய அருட்செயலை அனுபவத்தால் அறிந்தவர் அப்பரடிகள். எனவே, துன்பங்கள் தொடர்கின்ற பொழுது இறைவன் அதனின்று மீட்பான் என்ற உறைப்பு உள்ளத்திலே பிறவிதோறும் உயிர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இத்தளத்தில் பாடுகிறார்.


"தொடருந் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்த


தடரும் போதரனாயருள் செய்பவர் " (பா.௮)


என்றும், எவ்வாறு இறைவன் அருள் செய்வான் என்பதற்கு


" அத்தனே நமையாளுடையாய் எனும்


பத்தர் கட்கன்பர் " என அருளுவான் என்பார்.


"பாலைத்துறை இறைவனைக் கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே " என்ற அருள் வாக்குக்கு ஏற்ப மனமொழி மெய்களால் வணங்கி வினையிநின்று விடுபடுவோமாக.



இதழ். "சிவசிவ " ஜனவரி ௨00௨

No comments:

Post a Comment