Monday, June 28, 2010

பசி தவிர்த்த பரமர்

நட்பு கொண்டவர் துன்பப்படுங் காலத்தில் அவர் துன்பம் நீக்குதலே உயர்ந்த நட்பு. துன்பம் நேர்ந்த பிறகு நீக்குதலைவிட, துன்பம் நேராமல் நீக்குதல் அதனினும் உயர்ந்த நட்பு ஆகும். நண்பர் தாம் அனுபவிக்கும் துன்பத்தை வெளிப்படுத்திக் கூறியபிறகு அதனை உணர்ந்து நீக்க முயல்வது அத்துணை சிறப்பன்று. நண்பரின் துன்பத்தை அவர் கூறாமலே குறிப்பால் உணர்ந்து களைவதே விழுமிய நட்பு. அத்தகைய உயர்நட்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

சுந்தரர் பல பதிகளை வணங்கித் திருக்குருகாவூர்க்குச் சென்றார். அப்பொழுது, மிகுந்த நீர் வேட்க்கையும், பசியும் அவர்க்கு ஏற்ப்பட்டது.அதனால் மிகவும் வருந்தினார். இதனையுனர்ந்த இறைவன் சுந்தரர் வரும் வழியில் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்பந்தர் அமைத்தார். பசி நீக்கப் போதிசோரும் தாகம் தணிக்கக் குளிர் நீரும் ஏந்திக் கொண்டு மறைவேதியர் வேடந்தாங்கி அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.

சுந்தரர் அடியார்கள் திருக்கூட்டத்தினருடன் அப்பந்தருக்குள் புகுந்தார். இறைவன் அளித்த போதிசோற்றை உண்டு, குளிர் நீரைப் பருகி பசியும், தாகமும் தவிர்ந்தார். பின்னர் சுந்தரரும் அடியார்களும் இறைவன் திருவருளை நினைந்தபடி உண்ட களைப்பினால் உறங்கினர். அப்பொழுது, வேதியர் வடிவில் எழுந்தருளிய இறைவன் தன்நீர்ப்பந்தருடனே மறைந்தருளினார். துயில் நீங்கி எழுந்த சுந்தரர் வேதியரையும் பந்தரையும் காணாமையால் வந்தருளியவர் சிவபெருமானே என உணர்ந்தார். அவனருளைப் போற்றிப் பாடினார்.

No comments:

Post a Comment